ICMR ஆய்வின்படி, இந்தியாவிலேயே சர்க்கரை நோய் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பரவுவது குறித்து மத்திய அரசின் ICMR இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வு அறிக்கை, ‘தி லான்செட்’ என்ற புகழ்பெற்ற மருத்துவ இதழில் “இந்தியா நீரிழிவு [INDIAB] ஆய்வு” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 20 வயதுக்கும் மேற்பட்ட 1,13,043 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் இருந்து 33,537 பேரும், கிராமப்புறங்களில் இருந்து 79,506 பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயின் தேசிய பாதிப்பு 11.4 சதவீதமாக உள்ளது. இதில் கோவாவில் 26.4 சதவீதம் அதிகமாகவும், உத்தரபிரதேசத்தில் 4.8 சதவீதம் குறைவாகவும் பரவியுள்ளது. இதன்படி இந்தியாவில் 10 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில், 15.3 சதவீத மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். சிக்கிமில் அதிகபட்சமாக 31.3 சதவீதமும், மிசோரத்தில் மிகக் குறைந்த அளவாக 6.8 சதவீத சர்க்கரை நோய் பாதிப்பும் உள்ளது.
»»உலகின் முதல் Sodium Battery: லாரி டிரைவரின் மகள் சாதனை ««I
தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு நகர்ப்புறங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ஊரக பகுதிகளில் 7.5 முதல் 9.9 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் நீரிழிவு நோய்க்கு முந்தைய பாதிப்பு 10 முதல் 14.9 வரை உள்ளது. இது நகர்ப்புறங்களில் 10 முதல் 14.9 சதவீதம் வரையிலும், ஊரக பகுதிகளில் 5 முதல் 9.9 சதவீதம் வரையிலும் உள்ளது.
இது பற்றி டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைமை இயக்குநரும், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MDRF) தலைவருமான டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா கூறுகையில், “இந்த விரிவான அறிக்கை, நாட்டில் தொற்றா நோய்கள் தொடர்பான சுகாதாரக் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வின் முடிவு நாடு முழுவதும் பரவும் தொற்றா நோய்கள் பற்றிய நம்பகமான மற்றும் கணிசமான மதிப்பீடுகளை வழங்குவதால் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
கடந்த கால மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோயின் பரவல் விகிதம் மற்றும் வடிவங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. சில மாநிலங்கள் ஏற்கனவே உச்சநிலை வெளிப்பாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. “அனைத்து தொற்றா நோய்களும் நகர்ப்புறங்களில் மிகவும் பொதுவானவை என்றாலும், ஆய்வு முன்னர் கண்டறியப்பட்டதை விட கிராமப்புறங்களில் கணிசமாக அதிக பரவல் விகிதங்களைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.