அரசாங்கத்தின் ’கூட்டுறவு வங்கிகள்’ மூலமாக ரூ.1,000 உரிமைத்தொகை பயனாளர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.
2021-ல், DMK தேர்தலில் வெற்றிபெற்றவுடனே மக்கள் அனைவராலும் எதிர்பார்த்த திட்டமாக இருந்தது, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் `மகளிர் உரிமைத்தொகை திட்டம்’தான். அதனைப் பற்றின அறிவிப்பு கடந்த சட்டசபைக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனால் வெளியிடப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தாநாளன்று இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
இந்நிலையில், நேற்று யார் யாருக்கெல்லாம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது பற்றி, தலைமைச் செயலகத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அதில், சிறப்புச் செயல் திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மூத்த அதிகாரிகள் போன்றோர் சிலர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தில் யார் யாரெல்லாம் பயனாளர்களாக இணையலாம் என்பது பற்றின வழிகாட்டு நெறிகள் பற்றி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இம்மாத இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகுதி வாய்ந்த பயனாளர்கள் என்ற பெயரின்கீழ், அரசு துறையில் இல்லாதவர்கள், 2.5 லட்சத்துக்கு மிகாமல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள், பென்ஷன் வாங்காதவர்கள், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு இத்திட்டம் சென்றடையும் என நம்பத்தகுந்த தகவல் கிடைக்கின்றன. மேலும், இத்திட்டத்தை, சிறப்புச் செயல் திட்டத்துறையின் மேற்பார்வையின் கீழ் சமூகநலத்துறை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிய வருகிறது. மேலும், அரசின் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இத்தொகை பயனாளர்களுக்கு வழங்குவது பற்றியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட ’வழிகாட்டு நெறிமுறைகள்’ வரும் மாதத்துக்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் திட்டம் திமுகக்கு முக்கியம்! ஏன்?
2021-ல் சட்டசபைத் தேர்தலின்போது எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், திருச்சி மாநாட்டில் இதனை தொலைநோக்குத் திட்டமாக அறிவித்தார். இது முதல்வரின் கனவுத் திட்டமாகக் கருதப்படுவதால், நிதி நெருக்கடி இருந்தபோதிலும் இதைச் செயல்படுத்த திமுக அரசு முயல்கிறது. அது மட்டுமின்றி, 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு முன்பு திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார்கள். அதே நேரத்தில், கட்சிப் பாரபட்சம் இல்லாமல், தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் இத்திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து நெறிமுறைகளைத் இப்போது வகுத்து முடிவு செய்திருக்கின்றனர் என்கிறார்கள். இது ஒரு முதல்வரின் தொலைநோக்குத் திட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி வரும் காலங்களில் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ல் செயல்பாட்டுக்கு வருகிறது. இத்திட்டத்தைத் திமுக எப்படிச் செயல்படுத்தப்போகிறது என்ற அடிப்படையில், இந்த உரிமைத்தொகை திமுகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குவங்கியாக மாறுமா இல்லை விமர்சனப் பொருளாகுமா எனச் சொல்ல முடியும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்!