Friday, September 22, 2023
HomeDaily Updateஉலகின் முதல் Sodium Battery: மதுரை லாரி டிரைவரின் மகள் சாதனை..

உலகின் முதல் Sodium Battery: மதுரை லாரி டிரைவரின் மகள் சாதனை..

சினிமா, ஆன்மிகம், கலாசார விழாக்களுக்கு மட்டுமே மதுரை நகரம் அடையாளப்படுத்தப்படுகிறது. மதுரையில் வாழும் சாதாரண மக்களின் சாதனைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மதுரையில் எளிய குடும்பத்தில் பிறந்த சுபத்ரா, தனது படிப்பின் உயர்வால் ஒரு புதிய கண்டுபிடிப்பின் வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் மகள் சுபத்ரா. அவரது படிப்பின் மூலம், சுபத்ரா 2005-2006 இல் இஸ்ரோவில் எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் விஞ்ஞானியாக பணியாற்றினார். அதன் பிறகு, நெதர்லாந்து, துபாய், இத்தாலி மற்றும் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளால் சாதனை புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வேலையை விட்டுவிட்டார்.

தற்சமயம் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மக்கள் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக சோடியம் பேட்டரிகளை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது ஆராய்ச்சி வெற்றியடைந்தால், அது மலிவு விலையில் மின்சார வாகனங்களை உருவாக்க வழிவகுக்கும். தற்போது சென்னையில் அட்ரல் இஎஸ்பி என்ற பெயரில் சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க முயற்சி செய்துள்ளார்.

குடும்பத்தில் முதல் பட்டதாரி: இதுபற்றி சுபத்ரா கூறியதாவது: “என் அப்பா, அம்மா அதிகம் படிக்கவில்லை. என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. என்ன படிப்பது என்று தெரியாமல் பாலிமர் டெக்னாலஜியை டிப்ளமோ படிப்பாக படித்தேன். உடனே வீட்டில் என் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

மேலும் படிக்க விரும்பினேன். என் ஆசையை அம்மா அப்பாவுக்கு புரியவைத்ததால் பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். இஸ்ரோவில் கிடைத்த வேலை, ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எனது ஆசையைத் தூண்டியது. ஆனால் எனது ஆராய்ச்சியை ஒரு குறிப்பிட்ட சுழலில் உள்ள ஒரு சிந்தனைக்குள் மட்டுப்படுத்த விரும்பவில்லை.

எனது தனித்துவமான திறன்கள் மற்றும் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரோவை விட்டு வெளியேறினேன். ஆனால், அதன் பிறகு பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து பல்வேறு சூழல்களையும் சிரமங்களையும் சந்தித்தேன்.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். லித்தியம் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றது. எல்லோரும் லித்தியத்திற்கு மாறினால் அதுவும் பற்றாக்குறையாகிவிடும். இருப்பினும், சோடியம் அப்படி இல்லை. எனவே, லித்தியம் பேட்டரிகளுக்குப் பதிலாக சோடியம் பேட்டரி தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

சோடியம் பேட்டரி சந்தைக்கு வந்தால் 30% விலை குறையும். தற்போது நாங்கள் எங்கள் தயாரிப்புக்கான பேட்டன் வாங்க விண்ணப்பித்துள்ளோம். அடுத்ததாக சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைக்கு அனுப்பியுள்ளோம். இதற்கும் அனுமதி கிடைத்தால் உலகிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் சோடியம் பேட்டரி விற்பனைக்கு வந்ததாக இருக்கும்.

ஆராய்ச்சித் துறைகளில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளும் அங்கீகாரமும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, அறிவியல் துறையில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் நுழைவதில்லை. இந்தப் படிப்புகள் மற்றும் துறைகளில் சேர பெண்களை ஊக்குவிப்பதே எனது அடுத்த இலக்கு.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவும் ‘வருண் ஆதித்யா’ என்ற அறக்கட்டளையை நிறுவினேன். மேலும், உலகவியில் உள்ள சமூக தொண்டு நிறுவனங்களில் உறுப்பினராகி என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்”. இவ்வாறு அவர் கூறினார் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments