நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே ரசிகர்களையும், பிரபலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். இதையடுத்து நடிகர் தனுஷை வைத்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘கர்ணன்’ படத்தை இயக்கிய அவர், தற்போது நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதியை ஹீரோவாக வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார்.
முழுநேர அரசியலில் உதயநிதி கவனம் செலுத்தி வரும் நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படமே தனது கடைசிப் படம் என்று அறிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வைகை புயல் வடிவேலு இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான அரசியல்வாதி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இம்மாதம் கடைசி வாரத்தில் படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று நேரு உள் விளையாட்டரங்கில் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாதாமாக நடந்தது. இதில் தமிழக திரையுலக பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக கமல்ஹாசன், தாணு, பா.ரஞ்சித், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, பிரதீப் ரங்கநாதன், உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ” ‘மாமன்னன்’ பெரிய படம். இதில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எனது படம் வெளியாகிறது. இந்த படத்தில் உதய் சார், வடிவேலு சார், மாரி சார், பகத், ரகுமான் சார், பெரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’ படத்தில் அவர்களுடன் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் நான் கம்யூனிஸ்ட். என் கேரக்ட்டர் ஒவ்வொரு பெண்ணுடனும் கண்டிப்பாக இணைக்க முடியும். அதேபோல வடிவேலு சார், உதய் சாரும் படத்தில் வித்தியாசமாக இருப்பார்கள். திரைக்குப் பின்னால் மிகவும் வேடிக்கையாகவும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இயக்குனர் மிகவும் கஷ்டப்பட்டார். ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்போம். ஆனால் படம் அப்படி இல்லை என்று கூறிய அவர், இது சீரியஸ் கான்செப்ட் படம் என்பதை உறுதிப்படுத்தினார்.
பின்னர், கீர்த்தி சுரேஷின் திருமண விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “என்ன கல்யாணம் பண்ணி கொடுக்குறதிலே, குறியா இருக்கீங்க? நேரம் வரும்போது சொல்கிறேன்” என்றார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு இசையமைத்த பாடல்களில் வடிவேலுவின் பாடலும் எனக்கு ஒரு தனிப்பாடல் இருக்கு இந்த இரண்டும் தனக்கு மிகவும் பிடித்தது என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
Read also…