Tuesday, April 16, 2024
HomeDaily Updateடுவிஸ்ட்..நீட்டில் சாதித்த தமிழ் மாணவன்! இப்படி ஓர் அதிர்ச்சி பின்னணியா? புட்டுபுட்டு வைத்த அன்புமணி

டுவிஸ்ட்..நீட்டில் சாதித்த தமிழ் மாணவன்! இப்படி ஓர் அதிர்ச்சி பின்னணியா? புட்டுபுட்டு வைத்த அன்புமணி

மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்டு வரும் நீட் சமவாய்ப்பற்றது என்றும் CBSE க்கு சாதகமானது என்றும் அது நீக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக உள்ளது. பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது என்ற PMK யின் தொடர் குற்றச்சாட்டு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி குறித்த ஆய்வில் அத்தேர்வு ஏழை மாணவர்களால் எட்டிப்பிடிக்க முடியாதது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், அதில் சாதனை படைத்த மாணவர்களின் பின்னணி பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரிவான ஆய்வு நடத்தியுள்ளது.

அவர்களில் 38 மாணவர்களை தொடர்பு கொண்ட அந்நாளிதழின் செய்தியாளர், அவர்கள் படித்த பள்ளி, கல்வி வாரியம், நீட் தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட அனைத்து விவரங்களை சேகரித்திருக்கின்றனர். அந்தப் பட்டியலுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சன் குறித்த விவரங்களையும் சேர்த்தால் 39 சாதனை மாணவர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன.

மொத்தமுள்ள 39 பேரில் ஒருவர் கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்களில்லை. அவர்களில் 29 பேர் CBSE பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள். 5 பேர் ஆந்திர மாநில பாடத்திட்ட பள்ளிகளிலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளிலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 39ல் 29 பேர் பொதுப்பிரிவைச் சார்ந்த உயர்சாதி மாணவர்கள். 8 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், 2 பேர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். பிற வகுப்பினர் எவரும் இடம்பெறவில்லை.

சாதனை படைத்த மாணவர்கள் 39 பேரில் 38 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்பு பயிற்சி பெறாதவர் என்றாலும் ஆகாஷ் ஜூன் என்ற அந்த மாணவர், தில்லியின் புகழ் மிக்க தில்லி பொதுப்பள்ளியில் படித்தவர். சாதனை படைத்த 39 மாணவர்களும் சென்னை, தில்லி, புனே, கொல்கத்தா, விஜயவாடா, நாக்பூர், கோட்டா, விசாகப்பட்டினம் போன்ற நகரப்பகுதிகளை சேர்ந்தவர்கள். அனைவரும் வலிமையான பொருளாதார பின்னணி கொண்டவர்கள்.

மேல் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 39 மாணவர்களைப் பற்றியது என்றாலும் கூட, நீட்டில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேரும் அனைவருக்கும் இது பொருந்தும். இதிலிருந்து நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது 2 ஆண்டுகளாவது சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை உணர முடியும். நகர்ப்புறங்களைச் சார்ந்த பணக்கார மாணவர்கள் நகரின் மிகச்சிறந்த பள்ளிகளில் படிக்கக் கூடியவர்கள். அவர்கள் பள்ளிகள், பயிற்சி மையங்கள் என லட்சக்கணக்கில் செலவழிக்க முடியும்.

ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் வாழ்வதற்கு வசதியின்றி தினமும் கூலி வேலைச்செய்து கொண்டே அரசு பள்ளிகளுக்கு சென்று படிக்க கூடியவர்கள். சிறப்பு பயிற்சி மையங்களுக்கு செல்ல அவர்களுக்கு வசதியும் இருக்காது. இப்படிப்பட்ட எதிரெதிர் துருவங்களைச் சார்ந்த மாணவர்கள் ஒரே மாதிரியாக நீட் தேர்வை எழுத வேண்டும் என்பது எப்படி சரியாக பொருந்தும்? ஆமைகளும், முயல்களும் எவ்வாறு ஒரே போட்டியில் பங்கேற்க முடியும்? இதில் சமவாய்ப்பு எங்கே உள்ளது?.

முதல் 50 இடங்களில் வந்தவர்களில் சுமார் 74 % பேர் CBSE பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள். 13% பேர் ஆந்திர பாடத்திட்டம், 8% பேர் மராட்டிய பாடத்திட்டம், 5% பேர் மேற்கு வங்க பாடத்திட்டத்தில் படித்தவர்கள். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் உட்பட்ட பெரும்பான்மையான பிற பாடத்திட்டங்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை.

எல்லா மாணவர்களும் பணக்காரர்கள், 74 % பேர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், அனைவரும் நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 98 % பேர் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இப்படியாக சாதித்தவர்களுக்கும், சாதிக்க முடியாதவர்களுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும் நிலையில், இருவரையும் மோத விடுவது சரியா?.

நீட் தேர்வு எதற்காக அறிமுகம் செய்யப்பட்டது? 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருக்கும் போது, மருத்துவப் படிப்புக்கு எதற்காக தனி நுழைவுத்தேர்வு என்பன போன்ற வினாக்களை பா.ம.க எழுப்பியது. அதற்கு விளக்கமளித்த ஒன்றிய அரசு, ”வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. அந்த பாடத்திட்டங்களின் படியான மதிப்பீடும் வேறுபடும் என்பதால் ஒரே மாதிரியான மதிப்பீட்டிற்காக தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது” என்று கூறியது. அதை சரி என கொள்ளலாம்.

மருத்துவம் படிக்க விரும்புவோர் அனைவரும் ஒரே மாதிரியான அளவுகோலால் அளவிடப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுவது சரி என்றால், நீட் தேர்வு எழுதும் எல்லா மாணவர்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் தானே? அப்படி இல்லாமல் வேறுபட்ட பின்னணியை கொண்டவர்களுக்கு போட்டி நடத்தினால், கல்வி வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் வசதியுள்ளவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்? அது தானே இப்போது நடந்திருக்கிறது? இது எந்த அடிப்படையில் சமூகநீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும் ? என்று ஒன்றிய அரசு விளக்க வேண்டும்.

சம வாய்ப்பை வழங்காத, CBSE பாடத்திட்டம், தனிப்பயிற்சி பெறும், பணக்கார, நகர்ப்புற, உயர் வகுப்பினருக்கு சாதகமாக உள்ள நீட் தேர்வு எந்த வகையிலும் நியாயப்படுத்திட முடியாதது. எனவே, நீட் தேர்வு நாடு முழுவதும் ரத்து செய்திட வேண்டும். குறைந்தது சமவாய்ப்பற்ற நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments