கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்திலிருந்து ஒரு குழுவை உடனடியாக அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது… https://t.co/Gh5H4jI0JO
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று இரவு 7.20 மணியளவில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் திடீரென மோதியது. இரண்டு ரயில்களும் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி ரயில் தடம் புரண்டது.
இந்த ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டதுடன், தடம் புரண்ட பெட்டிகளுக்குள் 200க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்டனர். இரவு நேரமானதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு மற்றும் 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவசர கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரிக்க அவசர கட்டுப்பாட்டு அறையான பாலாசோரை (ஒடிசா) +91 67822 62286 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் IAS அதிகாரிகள் குழு நாளை ஒடிசா செல்கின்றனர்.