Tuesday, April 16, 2024
HomeDaily Updateயார் அந்த உண்மையான மாமன்னன்? அவர் சபாநாயகராக செய்தது என்ன?

யார் அந்த உண்மையான மாமன்னன்? அவர் சபாநாயகராக செய்தது என்ன?

தமிழகத்தின் எதிர்காலக் கல்வியை முடிவு செய்யும் அந்த ஒற்றை வாக்கினை பதிவு செய்து குலக்கல்வி திட்டத்தைக் கிடப்பில் போட வைத்தவர். காமராசரால் பின்னாளில்  அத்திட்டத்தை ரத்து செய்ய வழிவகை செய்தவர். அவர்தான் தமிழ்நாட்டின் பட்டியல் சமூகத்தின் முதல் சபாநாயகர் ஆவார்.

வடிவேலுவின் நடிப்பு மாமன்னன் படத்தில் ஒருபுறம் பேசுபொருளாகி வருகிறது என்றால், மறுபுறம் அவர் நடித்த கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் தழுவல் என சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

திரைப்படத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற அவைத் தலைவராக வருவது போல வரும் காட்சியே இந்த விவாதத்துக்கு காரணம்.

இதில் தமிழ்நாட்டின் முதல் தலித் சபாநாயகர் தனபால் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் வரலாற்றில் அந்த இடத்தை ஏற்கெனவே வேறொருவர் பதிவு செய்துள்ளார். யார்தான் அவர்? அவர் என்னதான் செய்தார்?

1953 ஆவது வருடம் ஒரு அறிவிப்பு வெளியாகியது. ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம். இதர நேரங்களில் பிள்ளைகள் பெற்றோரின் தொழில்களை  கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் ஆண் பிள்ளைகள் தந்தையின் தொழிலையும், பெண் பிள்ளைகள் தாயாரோடு வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்.

ராஜாஜி கொண்டு வந்த இந்த குலக் கல்வித் திட்டம் படிப்படியாக ஊரக பகுதிகளில் இருந்து நகரங்களிழும் செயல்பட தொடங்கியது. இது நிறைவேறினால் பிள்ளைகள்  தகப்பன் தொழிலை மட்டுமே செய்யும் நிலை உருவாகும், பெண்களின் கல்வி மறுக்கப்படும் என்று திராவிட கொள்கைகளை கொண்டவர்களும், காங்கிரஸ் கட்சியில் ஒரு குழுவினரும் ‘குலக் கல்வி திட்டம்’ என விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கோபாலன் என்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் இந்த திட்டத்தினை கிடப்பில் போட சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வழி வகை செய்தார். நடந்த வாக்கெடுப்பில் 137-137 என சமநிலை ஏற்பட்டது.

தமிழகத்தின் எதிர்காலக் கல்வி முறையை முடிவு செய்யும் அந்த ஒற்றை வாக்கினை பதிவு செய்தார் ஒருவர், அந்த ஒற்றை வாக்குதான்  குலக்கல்வித் திட்டத்தை கிடப்பில் போட செய்தது. காமராசரால் பின்னாளில் அத்திட்டத்தை ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டது. அந்த ஒற்றை வாக்கினை செலுத்தியவர்தான் சிவசண்முகம் பிள்ளை. அவரே தமிழ்நாட்டின் பட்டியல் சமூகத்தின் முதல் சபாநாயகர்.

அரசியல் ஆர்வம் கொண்ட சிவசண்முகம் பிள்ளை இளமை காலத்திலேயே காங்கிரஸில் இணைந்து பணியாற்றிவர். மகாத்மா காந்தியின் தீவிர சீடரான சிவசண்முகம் பிள்ளை, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று நுங்கம்பாக்கத்தில் வசித்த இவர் பிரசிடென்சி கல்லூரியிலும் லயோலா கல்லூரியிலும்,  தனது படிப்பினை முடித்தார்.

தனது 31 வயதில் மெட்ராஸ் மாநகராட்சி உறுப்பினரானார். பிறகு, காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவரான  சத்யமூர்த்தியால் ஒருமனதாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,  மாநகராட்சியின் முதல் தலித் மேயர் என்ற சிறப்பினை பெற்றார்.

இதையடுத்து மகாத்மா காந்தி, “நீங்கள் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் என் அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் தனித்துவத்துடன் செயல்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை.” என்ற வாழ்த்தினை அனுப்பினார். 1951-ஆம் ஆண்டு மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் . இதன் வாயிலாக, ‘சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்‘ என்ற அடையாளத்தையும் இவர் பெற்றார்.

1951 – 1955 காலங்களில் சிறந்த சபாநாயகராக திகழ்ந்த அவர், 1955 – 1961 காலத்தில் ஒன்றிய பணி ஆணையத்தின் (Union Public Service Commission) உறுப்பினராகவும் செயல்பட்டார். 1962-களில் பாராளுமன்றத்தின் ராஜ்ய சபாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், எழுத்துப் பணியிலும் வரலாற்று திரட்டல்களிலும், தனது சிறந்த பணியைச் செய்திருக்கிறார். பிரிட்டிஷாரின் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப்படையில் இருந்த, ஆதிதிராவிடர்களின் வரலாற்றை ஆவணத்துடன் அச்சில் பதிப்பித்தார்.

இவர் ஆதிராவிடர்களின் வரலாற்றை பேசும் ‘The History Of The Adi -Dravidas‘ என்ற நூலை இயற்றினார். தலித் மக்களின் முக்கிய தலைவர்களான M.C.ராஜாவின் வாழ்வையும் சிந்தனைகளையும் “ராவ்பகதூர் M.C.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட  உரைகள் மற்றும் எழுத்துக்கள்”என்ற நூலின் வாயிலாக பதிவு செய்துள்ளார். இதை 1930 களில்  ‘THE INDIAN PUBLISHING HOUSE‘ வெளியிட்டுள்ளது.

மேலும் “பிள்ளை” என்ற பெயர் எப்படி தலித் பெயராகும் என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இப்பட்டத்தை பல்வேறு சாதியினர் பயன்படுத்தியுள்ளதாக மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டன் தன் நூலில் எழுதியுள்ளார்.

இப்போதைய கணக்கெடுப்புகளில் அகமுடையார், கொல்லர், அம்பலக்காரர், இடையர், நாயர், சாயக்காரர், பறையர், நோக்கர், பணிசவர்,  சேனைக்குடியர், பணக்கர்,  செம்படவர்,  போன்ற சாதியினருக்குரிய பட்டப்பெயராக இது பதியப்பட்டுள்ளது. தேவதாசிகளின் ஆண் குழந்தைகளுக்கும் பிள்ளை என்ற பட்டத்தைத் வைத்துக் கொள்ளுகின்றனர். ஐரோப்பியர்களிடம் பட்லர்களாகப் பணிபுரியும் பல பறையர்கள், பிள்ளை என்ற பட்டப்பெயரைத் தங்கள் பெயரோடு வைத்துக் கொள்கின்றனர்.

இந்த செய்தி உண்மை என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன. பிரெஞ்ச் கவர்னர் டியூப்ளேயிடம் தலைமைத் துபாஷியாக திகழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை, யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர். கடந்த 100 ஆண்டில் புகழ் பெற்றிருந்த ராஜரத்தினம் பிள்ளை (நாயனக்கலைஞர்) இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவ்வாறு தான் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தலைவராக திகழ்ந்த சிவசண்முகம் பிள்ளை ஆதிதிராவிடர் சமுகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இன்றும் கூட தஞ்சாவூர் மாவட்டக் கள்ளர் சாதியினரிடமும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சாதியினரிடமும் ‘பிள்ளை’,  ‘முதலி’, என்ற பட்டங்கள் வழக்கிலுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments