Tuesday, April 16, 2024
HomeDaily UpdateKavach தொழிநுட்பம் என்றால் என்ன?- போட்டித்தேர்வு நோக்கில்(UPSC/TNPSC)

Kavach தொழிநுட்பம் என்றால் என்ன?- போட்டித்தேர்வு நோக்கில்(UPSC/TNPSC)

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படும் இந்த விபத்து, இந்திய ரயில்வேயால் செயல்படுத்தப்பட்ட ‘கவச்’ (கவசம்) பாதுகாப்பு அமைப்பு குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

விபத்துகளைத் தவிர்க்க Kavach:

‘கவச்’ என்பது இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பால் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இது ரயில் எஞ்சின், பாதை மற்றும் சிக்னல் என இந்த மூன்றிலும் நிறுவப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் ரேடியோ அலைவரிசை சாதனங்களின் தொகுப்பாகும். இந்த அமைப்பின் இறுதி இலக்கு ரயில் விபத்துக்களை முற்றிலும் தவிர்ப்பது மற்றும் பூஜ்ஜிய விபத்து இறப்புகளை அடைவது ஆகும்.

இரயில் ஓட்டுநர்கள் சிக்னல்களில் நிறுத்தத் தவறியதே ரயில் மோதி விபத்துகளுக்கு முதன்மைக் காரணம். இந்நிலையில், இரயில் ஓட்டுனர் சிக்னலை புறக்கணித்து ரயிலை இயக்கினால், (ஆன்டி டிரெயின் கொலிஷன் சிஸ்டம்) ஒரு ரயில் மற்றொரு ரயிலில் மோதாமல் இருக்க ஏற்பாடாக செயல்படும். ரயில் சிக்னலில் நிற்காமல் செல்லும் போது டிரைவரருக்கு அலாரம் அடிக்கும். அதே தண்டவாளத்தில் குறிப்பிட்ட தூரத்தில் மற்றொரு ரயில் வந்தால், ரயிலின் பிரேக் உடனடியாக ‘Kavach’ அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு ரயில் நிறுத்தப்படுகிறது.

மேலும், வேகக் கட்டுப்பாடு தொடர்பான விதிகளை ரயில் ஓட்டுநர்கள் பின்பற்றத் தவறினால், ரயிலில் உள்ள பிரேக் சிஸ்டம் தானாகவே செயல்பட்டு, அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் ரயிலின் வேகத்தைக் குறைக்கும். ரயில் லெவல் கிராசிங்குகளை நெருங்கும் போது வேகத்தை கட்டுப்படுத்துமாறு ஓட்டுநரை எச்சரிப்பதற்காக உரத்த விசில் ஒலிக்கப்படும். இவை தவிர மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

எவ்வளவு செலவாகும்?

‘கவச்’ அமைப்பை உருவாக்கி செயல்படுத்த இதுவரை ரூ.16.88 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில்வேயில் ‘கவச்’ அமைப்பை பொருத்துவதற்கு ஒரு கி.மீ.க்கு ரூ.50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பல வளர்ந்த நாடுகளில், ரூ.2 கோடி வரை செலவழிக்கும் இத்தகைய தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கவாச்’ குறைந்த செலவில் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்தியாவின் மொத்த ரயில் பாதை சுமார் 68,000 கி.மீ. இதை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியா முழுவதும் உள்ள தண்டவாளங்கள் மற்றும் ரயில்களில் இந்த அமைப்பை நிறுவுவதற்கான செலவு ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செயல்படுத்தும் நிலை:

தற்போது 34,000 கி.மீ. தொலைதூர ரயில் பாதைகளில் ‘கவச்’ அமைப்பை நிறுவ ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் 1,455 கி.மீ. ரயில் பாதையில் ‘கவச்’ நிறுவப்பட்டுள்ளது.

4 மார்ச் 2022 அன்று குல்குட்டா-சிட்கிட்டா(தெலுங்கானா) இடையேயான வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டமானது ‘கவாச்’ பாதுகாப்பு ஏற்பாடுகள் பயனுள்ளதாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதிப்படுத்தியது. மார்ச் 2024க்குள், இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்ட டெல்லி-ஹெளராமற்றும் டெல்லி-மும்பை ரயில் பாதைகளில் ‘கவாச்’ அமைப்பை முழுமையாகப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இதை மேலும் 4,000-5,000 கிமீ வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து ‘கவசம்’ இல்லாததால் ஏற்பட்டதா?

ஒடிசா மாநிலத்தை உள்ளடக்கிய தென்கிழக்கு ரயில்வே மண்டலத்திற்குள் உள்ள ரயில் பாதைகளில் ‘கவச்’ அமைப்பு பொருத்தப்படவில்லை. இதற்காக பட்ஜெட்டில் ரூ.468.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை செலவிடப்படவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வரும் நிலையில், ‘கவச்’ அமைப்பு இல்லாததற்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிக்னல்’ அமைப்பில் ஏற்பட்ட மாற்றமே விபத்துக்கு காரணம் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் மனித தலையீட்டின் சதியாக இருக்கலாம் என்றும் ரயில்வே வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments