TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற பலர் VAO பதவியை அதிகம் பேர் விரும்புகிறார்கள், ஏனெனில் VAO பதவி ஜூனியர் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பிற பதவிகளை விட அதிகாரம் மிக்கது.
கிராம நிர்வாக அலுவலர் என்பது கிராமத்தையே நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட பதவியாகும். கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் கணக்கெடுப்பு பணிகளை பார்க்க வேண்டும். நிலவரி, கடன்கள், வளர்ச்சி வரி மற்றும் அரசு பாக்கிகளை வசூலிக்க வேண்டும். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவற்றை வழங்குதல் மற்றும் அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற பொதுமக்களுக்கு சிட்டா மற்றும் உள்ளடக்க நகல்களை வழங்க வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பராமரித்தல்,.தீ, வெள்ளம், புயல் போன்ற விபத்துகள் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தல், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை மதிப்பீடு செய்ய , வருவாய் ஆய்வாளருக்கு உதவ வேண்டும். கொலை, தற்கொலை மற்றும் வழக்கத்திற்கு மாறான மரணங்கள் போன்றவை குறித்து காவல்துறைக்கு புகாரளித்தல் மற்றும் விசாரணை செய்வதற்கும் உதவி செய்தல்.
காலரா, பிளேக் போன்ற நோய்கள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும். இருப்புப் பாதை கண்காணித்தல் மற்றும் கிராம ஊழியர்களின் ஊதிய பட்டியல் கொடுக்க வேண்டும்.
அரசு சொத்துகளான கட்டிடங்கள், மரங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். VAO விடம் அரசின் வெளிச் சொத்துக்கள் பற்றிய பதிவுகள் இருக்கும் என்பதால், அதை கவனமாக பாதுகாக்க வேண்டும். புதையல் சேகரிப்பு குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியப் பதிவை பராமரித்தல், வளர்ச்சிப் பணிகள் நன்றாக செய்லபட சேவை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியவையும் முக்கியமானதாகும்.
இது மட்டுமின்றி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்களின் பணியை கண்காணித்தல், நில ஆக்கிரமிப்பை தடுத்தல், உயர் அதிகாரிகளுக்கு காணாமல் போன கற்கள் குறித்த அறிக்கை, சமூக விரோத செயல்கள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும். கிராமத்தில் குற்றவாளிகளின் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்களின் வருகை குறித்து புகார் அளிக்க வேண்டும்.
வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் இதர துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு, சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுப்பது, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பது, குற்றங்கள் நடந்தவுடன் உடனடியாக அறிக்கை அனுப்புவது, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க கிராம அளவில் அமைதிக் குழு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, சட்டவிரோத மணல் அகழ்வு, கற்கள் உடைத்தலை தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
இதை கேட்டாலே தலை சுற்றுகிறதா? ஆம் கிராம நிர்வாக அதிகாரி சாதாரண வேலை இல்லை. இந்த பணிகளை மாவட்டம் முழுவதும் செய்யக்கூடியவர் கலெக்டர். அவர் மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் அவரது தலைமையில் அரசு நிர்வாகம் இயங்குகிறது. அதேபோல், கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராம நிர்வாகம் இயங்குவதால், கிராம நிர்வாக அலுவலரின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கிடையில், VAO பதவியின் முக்கியத்துவம் குறித்து அதில் வேலை செய்பவர்களிடம் கேட்டபோது, “TNPSC குரூப் 4 தேர்வில் VAO தவிர வேறு எந்த துறையிலும் உள்ள JA பணி திருப்தி அளிக்காது.மற்றும் தனிப்பட்ட சிறு அதிகாரங்கள் எதுவும் இல்லை. JA பணியிலிருந்து குரூப் 2 பணிக்கு பதவி உயர்வு பெற பல ஆண்டுகள் ஆகலாம். மேற்கொண்டு தேர்வுக்கு படிக்க சில துறைகளில் மட்டுமே சூழல் உள்ளன. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று விரும்புபவர்கள், ரேங்கில் முன்னிலையில் இருந்தால் VAO பதவியைத் தேர்வு செய்யலாம். வருவாய்த் துறையில் பணிபுரிவது இப்போதெல்லாம் மிகவும் கடினம். இருப்பினும் தனிப்பட்ட அதிகாரங்களை விரும்புவோர் VAO வேலையைத் தேர்ந்தெடுக்கலாம். பல கிராம நிர்வாக அலுவலர்கள் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நான் அறிவேன்” என்றார்.